செவ்வாய், 9 ஜூலை, 2013

என் மகிழ்ச்சியின் ரகசியம்.. !

ஒவ்வொரு  முறையும்

என்னை பார்த்து 
சிரித்து ஆச்சர்யக்கும்
 
என் குழந்தையை போலவே...
வாழ்வின் அடுத்தடுத்த நொடிகளை 
ஆச்சர்யத்துடன் கண்டு ரசிக்கிறேன்..!

சனி, 29 ஜூன், 2013

திண்ணை..!

அம்மா அடித்த  போதும்
அப்பா கடிந்த போதும்
தஞ்சம் புகுந்தது
திண்ணையின் மடிகளில் தான்..

விடுமுறை நாட்களில் எல்லாம்
எங்களை வளர்த்து விட்ட திண்ணைகள்

வருவோர் போவோர்க்கெல்லாம்
விருந்தினர் மாளிகையாய்..
விருந்தினர்க்கோ
இளைப்பாறும் மண்டபமாய்..

காத்து கிடந்த திண்ணைகள்..
இன்று கட்டிட
வரைபடங்களில் கூட
காணமுடிவதில்லை .
.
தொலைக்காட்சி தொடர்களினால்
தன் வீட்டு  அன்னையையும்
எதிர் வீட்டு அத்தையையும்
பக்கத்து வீட்டு பாட்டியையும்
அடுத்த வீட்டு அக்காவையும்
 
தொலைத்துவிட்டு
தனியாய் தவிப்போடு கிடக்கின்றது
எஞ்சிருக்கும் அத்தனை  திண்ணைகளும் ....

விழி தீண்டலில் விதைத்தவை ..(பாகம்-4)

மழை பற்றிய கவிதைகள்
எனக்கு பிடிக்கும்..
இப்போதெல்லாம்
மழையைக் கூட பிடிப்பதில்லை
நீ நனைந்து  வருகையில் எல்லாம்..
****************************************************************************
எனக்கும் உனக்குமான
சண்டையிலும் போட்டியிலும்
எப்போதும்  வெல்வது
நம் காதலாகத்தான் இருக்கிறது.
****************************************************************************
என்னை நீ
கட்டிக் கொண்டதற்கு
ஆயிரம் காரணங்கள்
உனக்கு இருந்திருக்கலாம்  ...
நான் உன்னை காதலிப்பது
என்னை நீ கட்டிக் கொண்ட
ஒரு காரணத்திற்காகத்தான் .....
****************************************************************************
என் காதலை சொல்ல
 நான் கவிதையில்
மெனக்கெடும்  போதெல்லாம் ..
கண்ணடித்தே ஆயிரம் கவிதைகளை  சொல்லிவிடுகிறாய்..
****************************************************************************
உன் நிழற்படம் பார்த்து
உன்னை யாரேனும்
காதலிக்க  போகிறார்கள்
என கிண்டல் செய்கிறாய்..
என் நிஜத்தை
நீ வைத்திருக்கும்
தைரியத்தில் தானே..
****************************************************************************

புதன், 19 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை ..(பாகம்-2)

என் அழைப்புகளை
 நீ நிராகரிக்கும் போதெல்லாம்
எனக்கு கோபம் வருவது
என்னவோ அலைபேசியை
கண்டுபிடித்தவன் மீதுதான்..
****************************************************************************
எப்படி வேண்டுமானாலும்
என்னிடம் சண்டை இடு..!
சமாதானமாய் மட்டும்
இன்னும் வேண்டும்
என்ற அளவிற்கு மட்டும்
முத்தங்களை கொடுக்க பழகிக் கொள்..!
****************************************************************************
மழைக் காலங்களில்
நீ மறந்து விட்டு போன
குடையோடு சண்டையிட்டே
நீ வரும் வரை
என் நேரங்களை கழிக்கிறேன்....
****************************************************************************
காலையில் எழும் போதே
மனம்  தேட ஆரம்பிக்கிறது
உன் வரவை எதிர்பார்க்கும்
மாலை பொழுதை..
****************************************************************************
ஒன்றன் பின்
ஒன்றாய் எழுதினால்
அது தானே கவிதை
என கிண்டல் செய்யும் போக்கிரி
உன்னை தான்
கவிதையாக்கி  கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு  நாளும்..
****************************************************************************

விழி தீண்டலில் விதைத்தவை.. (பாகம்-3)

அதென்னவோ
 நீ  என்னை விட்டு
விலகி இருக்கும்
நேரங்களில் தான் தெரிகிறது
எனக்கு உன் மீதான காதல்..
****************************************************************************
உன்னை பார்ப்பதற்கு   முன்
எனக்கு காதல் தெரியாது...!
இன்று காதலுக்கு...
வேறு யாரையும் தெரியாது
உன்னோடு  செலவழிக்கவே
உலக காதல் அத்தனையும்
நான் மட்டுமே வாங்கி  கொண்டேன் ...!
****************************************************************************
நீ காதலை சொல்லி
நிராகரித்தவளை
கோவிலில் தற்செயலாய்
ஒருமுறை காட்டினாய்.
என் கண்களுக்கு என்னவோ
அவள் கடவுளாய் தெரிந்தாள்...
****************************************************************************என் முந்தானையில்
தலை துவட்டிக்  கொள்ளவே
மழையில் நனைந்து வரும்
திருடன் தானே நீ..!. .
****************************************************************************
எனக்கு வந்த
காதல் கடிதங்களை
முதல் இரவில்
உன்னிடம் காட்டிய  பொழுது
இப்படியா சந்தேகித்து
 கேள்வி கேட்பாய்
"என்னையாவது காதலிப்பாயா என.."
****************************************************************************

செவ்வாய், 18 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை..(பாகம்-1)

என்ன செய்தாய் என்னை
நீ இல்லாமல்
இருபத்தைந்து வருடம் 
வாழ முடிந்த எனக்கு.
இப்போதெல்லாம் 
ஐந்து நொடிகள் கூட 
வாழ தெரியவில்லையே..
****************************************************************************
என்னை செல்ல பெயர் 
வைத்து அழைத்து அழைத்தே 
என் உண்மை பெயரை 
மறந்தவன் தானே நீ....!
****************************************************************************
வருடங்கள் போன பின்பும் 
உந்தன் காதல் 
இப்படியே இருக்குமா..? 
என கேட்கும்  
என் அப்பாவி கணவா
நீ  அறிவியல் அறிந்ததில்லையா
உயிருள்ளவை எல்லாமே வளரும் என்று ..!
****************************************************************************
"உன்  நினைவுகள்
என் இரத்தத்தில் கலந்துவிட்டது"
என சொன்ன உனக்கு 
எப்படி மனம் வந்தது 
இன்று "இரத்த தானம்" செய்ய....!
***************************************************************************
அலை பேசியில் 
உன்னை அழைக்கையில் 
ஏதோ ஒரு குரல் 
தொடர்பு கொள்ள முடியாது 
என்பதை கேட்டதற்கே
உயிர் ஒரு நிமிடம் 
நின்றுவிட்டு துடிக்கிறதே.. 
****************************************************************************

வெள்ளி, 13 ஜூலை, 2012

வெற்றியின் ரகசியம்..!

வாடகை சைக்கிள் 
கற்றுத் தந்தது எனக்கான வாழ்வை.. 

அரைமணி நேரம் தான் 
முடிந்து விடுமோ எனும் அச்சத்தில்.. 

விழுந்து எழுந்து 
அவசரமாய் கற்றுக்கொண்டேன்.. 

அந்த அச்சத்தையே 
வாழ்கையை கற்றுக்கொள்ளவும் 
பிரயோகப் படுத்துகிறேன்..!