வெள்ளி, 13 ஜூலை, 2012

வெற்றியின் ரகசியம்..!


 

வாடகை சைக்கிள் 
கற்றுத் தந்தது எனக்கான வாழ்வை.. 

அரைமணி நேரம் தான் 
முடிந்து விடுமோ எனும் அச்சத்தில்.. 

விழுந்து எழுந்து 
அவசரமாய் கற்றுக்கொண்டேன்.. 

அந்த அச்சத்தையே 
வாழ்கையை கற்றுக்கொள்ளவும் 
பிரயோகப் படுத்துகிறேன்..!


சனி, 21 ஏப்ரல், 2012

தாலி கட்ட வருவானோ மகராசன்..!

 துணிவில்லா பயலுக்கு
கழுத்து நீட்டி..
கரை சேர்த்தாலே
என்னை ஒருத்தி..

பொறந்தப்போ தெரியலையே.
என் பொழப்பு சிரிக்கும்னு.. .

தாலி தான பொண்ணுக்கு வேலி
கொண்டாந்தது கட்டிட
எனக்கு ஏது நாதி..

காசு பணம் குடுக்காத சாமி..
ஆச மட்டும் அள்ளித் தந்தானே பாவி .

இடிச்சிட்டு போறவனுக்கு கூட..
என் கைய புடிச்சிட்டு
போக தோணலியே ..

தெரு விளக்கா என் கத
ஆகும் முன்னே..
தேர் கொண்டு
வருவானோ மகராசன் ..

பருவம் கூட ஆசை தந்தும்
பாதை மாறி போகலையே..

மாலை மாத்த மாமன் வந்தா
பாதம் தொட்டு வாழுறேன்..

பட்டினியா கிடந்துக்கிறேன்
முடிஞ்சவரை ..
பத்தினியா தான் வாழுவேன்
என் உசுருள்ளவரை

புரிந்துக்கொண்டேன் காதல் இன்னதென்று..!

சொல்லாமலே நிற்கிறேன்
உன் நிழல் முன்பு..

கொல்லாமலே சாகிறேன்
உன் விழி கண்டு..

கல்லாமலே எழுதினேன்
கவி ஒன்று..

தீராத நோய் தானோ திணறினேன்
எனக்குள் வந்ததென்று ..

காற்றைக்கூட கண்டறிகிறேன்
உன்னால் இன்று..

கண் பார்த்து சொல்ல
வார்த்தை மூன்று ..

முடியாமலே தோற்றுப் புரிந்தேன்
காதல் இன்னதென்று..


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வேண்டுமோ உன் காதல் எனக்கு..!

 

அழகாய்த்தான் தெரிந்ததாய்
அலை பாய்ந்த என் மனதிற்கு..

கிள்ளித் தருவாய் என
நினைத்த வேளைகளில்
கவிதைகளை அள்ளித் தந்தாய்..

வாழ்த்த வந்தவர் என
நினைத்த நேரத்தில்
வார்த்தைகளால் வீழ்த்த முயல்கிறாய்..

சங்கீதம் சொன்ன உன் விழிகளில்
சந்தேகம் குடிக் கொள்ள
சம்மதமின்றியே கோபமெனும்
சாத்தானை என் மீது ஏவினாய்..

உலக கவினற்கெல்லாம்
கனவுகள் தான் அவர்தம் சிறகுகள்..
அதுகூட உன் கைப்பிடியில்
அடக்க நினைக்கிறாய்..

சொந்தமாய் கவிநனை கேட்கிறாய்..
கனவுகளையும் அல்லவா சேர்த்து
பறிக்கத் துடிக்கிறாய்..

உலகத்தையே உறவாய் நினைக்கும்
எனக்கு உனதுறவில்
உலகம் பூட்ட நினைக்கிறாய்..

உன்னை இழப்பதால்
இன்று
இதயம் வெற்றிடமாகலாம்..

நாளை
அந்த வானமோ
எந்தன் வசமாகும்..

காதல் கவிதைகள்

என் காதோரம்
நீ தந்த ஒற்றை
மூச்சுக்காற்றில்
என் வாழ் நாள்
முழுமைக்குமான
சுவாசத்தை பெற்றுவிட்டேன்...!
 **********************************************

என்னை பார்த்ததும்
மறைக்கும்
உன் சிகரெட்டை போலவே
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நானும் மறைக்கிறேன்
உன் மீதுள்ள ஆசையை.. !
 ***************************************************

என்னைப்பற்றி
சொல்லும்
போதெல்லாம்
கண்டிப்பாய்
மறைத்துவிடுகிறேன்
என்னை பற்றி உன்னிடம்..!
************************************************

நீ அறிவாயா..?
உன்னை
கடந்து போகும் காற்றில்
மூன்றில் ஒரு பங்கு
என் சுவாசம் என்பதை..!
*****************************************************

நியாபகமாய்
கிழிக்கப்பட்ட
பக்கங்களில் எல்லாம்
எப்போதும்  போல்
மறதியாய் அமர்ந்திருக்கிறது
உன் நினைவுகள்..!
****************************************************

உனக்கு தெரியாது..!
பத்திரமாய் இருந்துக்கொள் என
நீ பிரிகையில்
சொல்லிச் செல்லும்
வார்த்தைகள் தான்
ஒவ்வொரு  நாளும்
என்னை பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது  என்ற விவரம்..!
******************************************************************************************

உன்னை காதலித்து
உருகி  உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய் எனக்கென
மிஞ்சியிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும் ..
கவியாய்  மாற்றியமைத்த
தலைஎழுத்தும் தான்..!
****************************************************************************

இது தான் வாழ்க்கை..!

 

போராடி வாழ
எண்ணம் மறுத்தது..

போராட்டம் மட்டுமே
எனக்கு வாழ்வா நெஞ்சம் கொதித்தது..

விரக்தியோடு
சாலையில் நடந்தேன்..

உடைந்த பொம்மை ஒன்றை
வீதியில் கண்டெடுத்த குழந்தை..

விண்வெளியில் மிதப்பது போன்று
புன்னகை பூத்தது..

கிடைத்ததை வைத்து
மகிழ்வை தேடு..

எனும் உண்மை
சாலையோரக் குழந்தை
எனக்கு சொன்னது..

முன்பு விட
வேகமாய் நடந்தேன்
அதே வீதியில்...
இப்போது விரக்தி இல்லை என்னில்....

உன்னால் கிடைத்தது இது மட்டும் தான்..!

 

உனக்காக
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய்
எனக்கென
மிஞ்சிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும்
கவியாய் மாற்றியிருந்த
தலைஎழுத்தும் தான்....!

நானாகிப் போன என் காதலன்.!

நானாகிப் போன என் காதலன்.! 

நானாகத்தான் சொன்னேன்
என் காதலை ..

வண்டு வரும் வரை இனி
பொறுமை இல்லை மலருக்கு..

என்னை மொய்த்து விடு
தடையேதுமில்லை உனக்கு..

காதலை சொல்லக்கூட
உன் வாய் வார்த்தை
வீணாக வேண்டாம்
என் பெயரை
உச்சரிக்கையில் மட்டும்
வார்த்தைகள் உயிர் பெறட்டும்...

என்னை உரசி போனவர்களில்
உயிரை உலுக்கி போனவன் தானே நீ ..

வயிற்றுக்கு சோறிடும்
வேலை மட்டுமே உனக்கு..

உன் வாழ்க்கைக்கான
அத்தனைக்கும் இனி நானே பொறுப்பு..

அச்சம் நாணம் எல்லாம்
உன் காதலில் அடகு வைத்து
காதல் இச்சை தீர
கல்யாண மேடையில் எதிர் நின்றேன்..

விளக்கேற்ற வந்தேன்
உன் வீடு தேடி ..
இனி விளக்கணைந்த
நேரங்களில் எல்லாம்
என்னோடு நீ வெளிச்சம் தேடு ..

ஒருவனுக்கு ஒருத்தியாய் வந்தேன்..
உனக்குள் என்னை கரைத்துக்கொண்டு
உலகில் நீ
ஒருவனாகவே இருந்துவிடு ..

உன் பிள்ளை
நான் சுமக்க உன்னிடம்
பிள்ளையாகிப்போன
என்னை உன்னில் ஊற்றி
எனக்கும் சேர்த்து
என் பிள்ளைக்கும்
நீயே அன்னையாகி விடு.. ..

திங்கள், 9 ஏப்ரல், 2012

ஒரு காரணத்தை எப்படி வெளியில் சொல்வேன்..!

விழித்தெழும் ஒவ்வொரு
இரவு வேளையிலும்
ஒவ்வொரு கனவு ..

விஷமுள்ள நாகம்
யாரையோ தீண்டுவதாய்.

நரி ஒன்று
ஊருக்குள் ஊளையிடுவதாய்..

குரங்கு ஒன்று
எதையோ பறித்து போவதாய்..

யானை ஒன்று
பயமுறுத்தி துரத்துவதாய்.

நான் கண்ட
ஒவ்வொரு கனவிற்கும்
பயந்தபடியே பல காரணங்களை
சொல்கிறாள் அம்மா..

அத்தனையும் என்
ஒற்றை குணம்
என்பதை நான்
எப்படி வெளியில் சொல்வேன்..?

பொம்மையோடு கற்ற பாடம்..!

தினமும்
ஏதேதோ பேசுகிறாள்
என் மகள் பொம்மையோடு..

அவள் அயர்ந்த போது
என்ன பேசினாள்
என பொம்மையோடு வினவினேன்..

காட்டிகொடுக்கும் பழக்கம்
எங்கள் குலத்திற்கு இல்லை
என்பது போல் என்னிடம்
மௌனம் மட்டுமே காட்டியது

வெள்ளி, 23 மார்ச், 2012

பாட்டியம்மா...

அப்பா அடித்த போதும்
அம்மா கடிந்த போதும்
நான் ஒளிந்து கொண்டது
அவள் மடி தான்....

வெற்றிலை இடித்துக் கொடுக்கவும்
வெளிக்கு கூட்டிக் கொண்டு போகவும் அவளிடம் விலை பேசியவன் நான்..

அன்று

விளையாட்டின் போதும்
விவரம் தெரிந்த போதும்
பெரிதாய் எனக்குள் தோன்றவில்லை..

இன்று வேலை கிடைத்தும்
எல்லாம் கிடைத்துவிட்ட
வாழ்வு அமைந்தும் அவளின் வெறுமை என்னுள் நீங்கவில்லை..

தேடிக்கொண்டிருக்கிறேன்..
அவளை அழைத்து செல்ல மறுத்த கோவிலிலும்
அவள் அடைந்திருந்த
கொல்லையிலும்..

காணவில்லை
படமாகி விட்ட என் பாட்டி

என் கண்ணீரும் தேடுகிறதே..!

அழும் போதெல்லாம்

நெஞ்சோடு சாய்த்து

அரவனைத்தவனை

எட்டி பார்த்து தேடுகிறது

என்னை போலவே

என் கண்ணீரும்..

என்னை போலவே திணருகிறதே..!

உன்னிடம்

கொடுத்துவிட்ட

நிழலை

இனி எப்படி பூமியில்

பிரதிபலிக்க செய்வது

என என்னை போலவே திணருகிறதே

என் மேல் வீசும்

ஒளிகள் எல்லாம்.....

திங்கள், 23 ஜனவரி, 2012

உன்னை விட்டு செல்கிறேன் தூரமாய்..!

ஏதோ ஒரு மழைநாளில்

உன் ஞாபங்களை

கண்ணீரால் தொலைத்த கையோடு

வானம் போலவே வாழ்வை

வெறுமையாய் களிக்கிறேன்..

வாசித்து எழுதுபவருக்கு மத்தியில்

உன்னை யோசித்து

எழுதிய கவிதைகளை

தீக்கிரையாக்கி குளிர்காய்கிறேன்..

எல்லாம் கொடுத்து விட்டேன்..

கொடுக்காமலே வைத்து கொண்டேன்..

கோபம் மட்டும்

கொஞ்சம் கொஞ்சமாய் அதையும்

நீயே களவாடிக் கொள்ள

உன்னை விட்டு செல்கிறேன்..

இன்னும் தூரமாய்....

புள்ள வரம் தாரும்மையா..!

கொல்லையில குளிச்சப்போ
சேலை மறச்சி குளிச்சேன்..

குளத்துல குளிச்சப்போ
கைய மறச்சி குளிச்சேன்..

குற்றாலத்துல குளிச்சப்போ
குதூகலமா குளிச்சேன்..

குளிக்கத்தான் நெஞ்சுக்குள்ள
கோடி ஆசை.

வருஷம் ஒன்னு கூடி போச்சு
ஆனாலும் குளிக்கிறேன்னு
ஊரெல்லாம் கைகொட்டி பேச...

ஊர் பாக்க அப்பன் சொன்னாரு..
ஆத்தா தான் பொறந்திருக்குனு

வளர்ந்தப்போ ஆத்தா சொன்னா
என்ன பெத்தவ நீ தான்னு..

கட்டிகிட்டவர் கட்டில்ல சொன்னாரு
இனி எனக்கு அம்மா நீ தான்னு..

ஊரு மட்டும் சொல்லுது
என்னை மலடின்னு...

பொட்ட புள்ளையா
பொறந்ததுதான் பாவமா..

நான் பெத்தெடுக்க புள்ள இல்ல
சாமி தந்த சாபமா..

புள்ள ஒன்னு தாருமய்யா
நான் வாழுறேன்..

மறுத்துபுட்டா உசுர தான்
தார வாக்குறேன்..!

கதை சொன்ன காலம் மலையேறிப்போச்சு .!

பாட்டி சொன்ன கதையெல்லாம்
பரணுல தான் போட்டாச்சு..

கதை சொன்ன காலமெல்லாம்
கல்வெட்டுல பதிஞ்சாச்சு...

புள்ளைக்கு கதை சொல்ல
நேரத்தை தான் தொலைச்சாச்சு...

வளக்குற பொறுப்பத்தான்
டிவி பொட்டிகிட்டே விட்டாச்சு.. !

வெள்ளி, 6 ஜனவரி, 2012

மடி தருவாயோ மகளே .. .!

கார்த்திகை மாத குளிரில்
வெண் பனியாய் நான் சிந்தியதை
வெள்ளி நிலவானவள் கவிதையாக்கி தந்தாள்..

மயக்க நிலையிலே அவள்
விழி மூடி இருக்க
மடி தேடிய கன்றாய்
மகள் அழு குரல் கேட்க..

பால் குடுக்க மாரு தான்
எனக்கு இல்லையேனு
மனசுக்குள் தவித்தேனே.. ..

மாதம் தான் மெல்ல ஓட
மானாட்டாம் தத்தி தாவ
தங்க விலையாட்டம் வளர்ந்தாலே..

இடக்கையால் அவள் கிறுக்கையிலே
அப்பனாட்டம் பொறந்துருக்குனு
பெற்றவள் சொல்லிப் போக
கண்ணடிதுக்காட்டி கௌரவ
விருது கொடுப்பாளே..

முத்தம் கேட்டு நான் கெஞ்ச
முடியாதுன்னு முகத்தில்
அவ எச்சில் துப்ப
மொத்தமும் கிடைத்ததுபோல்
சொக்கித்தான் நிற்பேனே.. ..

ஆசையாய் அவ உள்ளங்கைய
என் கன்னத்துல வைக்கும் போது
அழுதுகிட்டே அறைவாளே..

நெஞ்சமெல்லாம் நிறைந்த பின்னும்
இன்னும் கொஞ்சம் கேட்குமே
மறுமுறையாய் அடி வாங்க..

கோடியாய் வச்சிருந்த பாசத்தை
கொட்டி தீர்க்க மகளாய் வந்தாளே....

சீதனம் தான் சேர்த்து வைத்து
துணை கண்டு அனுப்புகையில்
காணாத கண்ணீர் தான்
கன்னத்துல நிக்குமே..

நான் எடுத்த பிறவியை
நிரப்ப வந்த உன் வரவை
விதி முடிந்து போகையிலே
மடி தந்து சுமந்தா போதுமே....!

மறுமுறையாய் காத்திருக்கிறேன்...!

நீ காயப்படுத்திய
வார்த்தைகளோடு காத்திருக்கிறேன்..

மீண்டும் என் பாதையில்
பயனிப்பாய் என பாத்திருக்கிறேன்..

என் நேசம் அறியும்
முன்பே நெஞ்சம் அறிந்தவள் நீ

அதை கொன்று விட்டு போக
வஞ்சம் நினைத்தது ஏன்..!

துணையாகி போன என் நேசம்
இன்று சுமையாகி போனதேன்..

நலமா என்று தான் ஆரம்பித்தேன்.
பின்னாளில் உன் நலமே
என் வாழ்வானது..

இன்று நீ விட்டு போனதில்
வாழ்வே கேள்விக்குறியானது..!

எனை எட்டி போனதில்
காலங்கள் நகராமல் மூர்ச்சையானது..

ஆயினும்....

மறுமுறையாய் காத்திருக்கிறேன்..
மீண்டும் என் பாதையில் பயனிப்பாய்
என பாத்திருக்கிறேன்..

எப்படி முடிகிறது உன் போன்ற சிலரால் ..

புதைக்கப்பட்ட வரலாற்று காதல் தோல்விகள்
உன் போன்றவர்களால் இன்னும்
விதைக்க படுவதேன்..

உன்னால் எனக்குள் வளர்க்கப் பட்ட
நேசம் வேர் கூட மிச்சமின்றி
பறிக்க பட்டதேன்..

விழியிடம் தோற்று வாங்கிய காதலை வலியோடு நினைந்து வாழ்வை
தொலைக்கத் தானா..

அன்று சொல்வதற்கு
தயங்கிய காதலை தான்
இன்று யாரிடமும்
சொல்ல முடியா ரணமானதேன்.

. நியாபகங்கள் சிறகு முளைப்பதை
தடுக்க முடியவில்லை..

உன் சிந்தனையை மனதிற்க்கோ
மறக்க தெரியவில்லை..

உன்னால் மட்டும் எல்லாம் முடிகின்றது..

பொய்மையை பூச்சூடி கொண்டதாளா..

கொன்று விட துடிக்கும்
கோபங்களைக் கூட
மிஞ்சுகிற நேசத்தை
எப்படி மறக்க முடிகின்றது..

உன் போன்ற சிலரால்..

என்று தணியும் இந்த தாகம்..! சிறுகதை

அது ஒரு அரசாங்க மருத்துவமனை.அன்று கிளைக் கட்டிடத் திறப்பு விழா நடந்துக்கொண்டிருந்தது.
மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்கள்,ஆளுங்கட்சி பிரமுகர்,சினிமா நடிகர் என மேடையே களை கட்டிருந்தது.மருத்துவமனையின் பணியாளர்கள் அத்தனை பேரும் பார்வையாளர்களாய் அங்கு அமர்ந்திருந்தனர்..
மேடையில் இருந்த அரசியல்வாதியாக இருக்கட்டும்,நடிகராகட்டும் அத்தனை பேரும் அங்குள்ள மருத்துவர், நர்ஸ் என அனைவரையும் பாராட்டிய வண்ணம் இருந்தனர்..
"ஐயோ தவிக்குதே ஒரு பொட்டு தண்ணி பக்கத்துல காணாமே.".
இது எலும்பு முறிவு வார்டில் இருந்த நோயாளியின் சத்தம் .
"ஏன்யா கத்துற இங்க ஒருத்தரும் இல்ல எல்லாரும் மீட்டிங் பாக்க போயிருக்காங்க" என்று பக்கத்துக்கு பெட்டில் இருந்த நோயாளி கூறினான் ..
அந்த வார்டில் இருந்த எல்லோருமே கை கால் முறிந்து நடமுடியாதவர்களாய் இருந்தனர்.

"அம்மா நர்சம்மா"
என்று கத்திக் கொண்டே ஒருக்களித்து திரும்பினான் . அப்படி புரண்டு படுத்துக் கொடுத்தது அவனுக்கு வேதனையாக இருந்தது போலும் வலியில் முகம் சுளித்தான்.

"என்னையா கூச்சல் போடறீங்க? நர்சம்மா திட்டுவாங்க" என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்தான் வார்ட் பாய் ..

இதற்கிடையில் அந்த அரசியல்வாதி பேசுவது ஒலிப்பெருக்கி வழியாக கேட்டது.

"இந்த மருத்துவமனை நம் நாட்டுக்கு குறிப்பாக இந்த ஊருக்கு மகத்தான சேவை செய்கிறது என்பதில் சந்தேகமே இல்லை "

எனக் கூற பார்வையாளராய் இருந்த நர்ஸ் , வார்டு பாய் மருத்துவர்கள் என அனைவரும் கரகோஷம் எழுப்பினர். .

"தாகம் " அரற்றினான். அந்த தாப ஜுரக்காரன்.

"யோவ் கொஞ்சம் பொறுயா அவங்க வரவேணா மீட்டிங் எப்போ முடியுமோ."

"எப்படிங்க பொருக்குறது என்னால முடியலையே." என அவன் நெளிந்தான்
.
இதைக் கண்ட மூன்றாவது பெட் காரன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. சட்டென்று எழுந்து இருக்கும் ஒத்தக்காலை வைத்து நொண்டி அடித்துச் சென்று எப்படியோ தத்தி தாவி தண்ணீர் பானைக்கு அருகே சென்றது தான் தாமதம்.
தடுமாறி பானை உடைய சத்தம் கேட்டு ஓடி வந்த வார்டு பாய் இதைப் பார்த்து விட்டு நர்சிடம் சொல்ல
வேண்டா வெறுப்பாய் எழுந்து வந்தவர் "யோவ் என்னய்யா பண்ற சுத்த நான்சென்ஸா இருக்க கொஞ்ச நேரம் மீட்டிங் பார்க்க விடறீங்களா போய்யா எடத்துக்கு பெரிய டாக்டர் வரட்டும் உங்க எல்லாரையும் கம்ப்ளைன்ட் பண்றேன்" .
என கத்திவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமலே மீட்டிங் காணும் ஆவலில் ஓடினாள்.
வார்டு முழுக்க மௌனம் .
ஒலிபெருக்கியில் சத்தம் அதிகமாய் கேட்டது.
"இந்த மருத்துவமனியில் நோயாளியாக வந்து இப்பேற்பட்ட நர்ஸ்களின் சேவையை பெற எனக்கும் கூட ஆசையாக இருக்கிறது ."

என அந்த நடிகர் சொல்ல கரகோஷம் அந்த கட்டிடத்தையே கிடுகிடுக்க செய்தது.......