வெள்ளி, 6 ஜனவரி, 2012

மடி தருவாயோ மகளே .. .!

கார்த்திகை மாத குளிரில்
வெண் பனியாய் நான் சிந்தியதை
வெள்ளி நிலவானவள் கவிதையாக்கி தந்தாள்..

மயக்க நிலையிலே அவள்
விழி மூடி இருக்க
மடி தேடிய கன்றாய்
மகள் அழு குரல் கேட்க..

பால் குடுக்க மாரு தான்
எனக்கு இல்லையேனு
மனசுக்குள் தவித்தேனே.. ..

மாதம் தான் மெல்ல ஓட
மானாட்டாம் தத்தி தாவ
தங்க விலையாட்டம் வளர்ந்தாலே..

இடக்கையால் அவள் கிறுக்கையிலே
அப்பனாட்டம் பொறந்துருக்குனு
பெற்றவள் சொல்லிப் போக
கண்ணடிதுக்காட்டி கௌரவ
விருது கொடுப்பாளே..

முத்தம் கேட்டு நான் கெஞ்ச
முடியாதுன்னு முகத்தில்
அவ எச்சில் துப்ப
மொத்தமும் கிடைத்ததுபோல்
சொக்கித்தான் நிற்பேனே.. ..

ஆசையாய் அவ உள்ளங்கைய
என் கன்னத்துல வைக்கும் போது
அழுதுகிட்டே அறைவாளே..

நெஞ்சமெல்லாம் நிறைந்த பின்னும்
இன்னும் கொஞ்சம் கேட்குமே
மறுமுறையாய் அடி வாங்க..

கோடியாய் வச்சிருந்த பாசத்தை
கொட்டி தீர்க்க மகளாய் வந்தாளே....

சீதனம் தான் சேர்த்து வைத்து
துணை கண்டு அனுப்புகையில்
காணாத கண்ணீர் தான்
கன்னத்துல நிக்குமே..

நான் எடுத்த பிறவியை
நிரப்ப வந்த உன் வரவை
விதி முடிந்து போகையிலே
மடி தந்து சுமந்தா போதுமே....!

1 கருத்து:

  1. கிராமத்து தாயின் ஏக்கத்தை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் .

    பதிலளிநீக்கு