சனி, 21 ஏப்ரல், 2012

தாலி கட்ட வருவானோ மகராசன்..!

 துணிவில்லா பயலுக்கு
கழுத்து நீட்டி..
கரை சேர்த்தாலே
என்னை ஒருத்தி..

பொறந்தப்போ தெரியலையே.
என் பொழப்பு சிரிக்கும்னு.. .

தாலி தான பொண்ணுக்கு வேலி
கொண்டாந்தது கட்டிட
எனக்கு ஏது நாதி..

காசு பணம் குடுக்காத சாமி..
ஆச மட்டும் அள்ளித் தந்தானே பாவி .

இடிச்சிட்டு போறவனுக்கு கூட..
என் கைய புடிச்சிட்டு
போக தோணலியே ..

தெரு விளக்கா என் கத
ஆகும் முன்னே..
தேர் கொண்டு
வருவானோ மகராசன் ..

பருவம் கூட ஆசை தந்தும்
பாதை மாறி போகலையே..

மாலை மாத்த மாமன் வந்தா
பாதம் தொட்டு வாழுறேன்..

பட்டினியா கிடந்துக்கிறேன்
முடிஞ்சவரை ..
பத்தினியா தான் வாழுவேன்
என் உசுருள்ளவரை

புரிந்துக்கொண்டேன் காதல் இன்னதென்று..!

சொல்லாமலே நிற்கிறேன்
உன் நிழல் முன்பு..

கொல்லாமலே சாகிறேன்
உன் விழி கண்டு..

கல்லாமலே எழுதினேன்
கவி ஒன்று..

தீராத நோய் தானோ திணறினேன்
எனக்குள் வந்ததென்று ..

காற்றைக்கூட கண்டறிகிறேன்
உன்னால் இன்று..

கண் பார்த்து சொல்ல
வார்த்தை மூன்று ..

முடியாமலே தோற்றுப் புரிந்தேன்
காதல் இன்னதென்று..


செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வேண்டுமோ உன் காதல் எனக்கு..!

 

அழகாய்த்தான் தெரிந்ததாய்
அலை பாய்ந்த என் மனதிற்கு..

கிள்ளித் தருவாய் என
நினைத்த வேளைகளில்
கவிதைகளை அள்ளித் தந்தாய்..

வாழ்த்த வந்தவர் என
நினைத்த நேரத்தில்
வார்த்தைகளால் வீழ்த்த முயல்கிறாய்..

சங்கீதம் சொன்ன உன் விழிகளில்
சந்தேகம் குடிக் கொள்ள
சம்மதமின்றியே கோபமெனும்
சாத்தானை என் மீது ஏவினாய்..

உலக கவினற்கெல்லாம்
கனவுகள் தான் அவர்தம் சிறகுகள்..
அதுகூட உன் கைப்பிடியில்
அடக்க நினைக்கிறாய்..

சொந்தமாய் கவிநனை கேட்கிறாய்..
கனவுகளையும் அல்லவா சேர்த்து
பறிக்கத் துடிக்கிறாய்..

உலகத்தையே உறவாய் நினைக்கும்
எனக்கு உனதுறவில்
உலகம் பூட்ட நினைக்கிறாய்..

உன்னை இழப்பதால்
இன்று
இதயம் வெற்றிடமாகலாம்..

நாளை
அந்த வானமோ
எந்தன் வசமாகும்..

காதல் கவிதைகள்

என் காதோரம்
நீ தந்த ஒற்றை
மூச்சுக்காற்றில்
என் வாழ் நாள்
முழுமைக்குமான
சுவாசத்தை பெற்றுவிட்டேன்...!
 **********************************************

என்னை பார்த்ததும்
மறைக்கும்
உன் சிகரெட்டை போலவே
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நானும் மறைக்கிறேன்
உன் மீதுள்ள ஆசையை.. !
 ***************************************************

என்னைப்பற்றி
சொல்லும்
போதெல்லாம்
கண்டிப்பாய்
மறைத்துவிடுகிறேன்
என்னை பற்றி உன்னிடம்..!
************************************************

நீ அறிவாயா..?
உன்னை
கடந்து போகும் காற்றில்
மூன்றில் ஒரு பங்கு
என் சுவாசம் என்பதை..!
*****************************************************

நியாபகமாய்
கிழிக்கப்பட்ட
பக்கங்களில் எல்லாம்
எப்போதும்  போல்
மறதியாய் அமர்ந்திருக்கிறது
உன் நினைவுகள்..!
****************************************************

உனக்கு தெரியாது..!
பத்திரமாய் இருந்துக்கொள் என
நீ பிரிகையில்
சொல்லிச் செல்லும்
வார்த்தைகள் தான்
ஒவ்வொரு  நாளும்
என்னை பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது  என்ற விவரம்..!
******************************************************************************************

உன்னை காதலித்து
உருகி  உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய் எனக்கென
மிஞ்சியிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும் ..
கவியாய்  மாற்றியமைத்த
தலைஎழுத்தும் தான்..!
****************************************************************************

இது தான் வாழ்க்கை..!

 

போராடி வாழ
எண்ணம் மறுத்தது..

போராட்டம் மட்டுமே
எனக்கு வாழ்வா நெஞ்சம் கொதித்தது..

விரக்தியோடு
சாலையில் நடந்தேன்..

உடைந்த பொம்மை ஒன்றை
வீதியில் கண்டெடுத்த குழந்தை..

விண்வெளியில் மிதப்பது போன்று
புன்னகை பூத்தது..

கிடைத்ததை வைத்து
மகிழ்வை தேடு..

எனும் உண்மை
சாலையோரக் குழந்தை
எனக்கு சொன்னது..

முன்பு விட
வேகமாய் நடந்தேன்
அதே வீதியில்...
இப்போது விரக்தி இல்லை என்னில்....

உன்னால் கிடைத்தது இது மட்டும் தான்..!

 

உனக்காக
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய்
எனக்கென
மிஞ்சிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும்
கவியாய் மாற்றியிருந்த
தலைஎழுத்தும் தான்....!

நானாகிப் போன என் காதலன்.!

நானாகிப் போன என் காதலன்.! 

நானாகத்தான் சொன்னேன்
என் காதலை ..

வண்டு வரும் வரை இனி
பொறுமை இல்லை மலருக்கு..

என்னை மொய்த்து விடு
தடையேதுமில்லை உனக்கு..

காதலை சொல்லக்கூட
உன் வாய் வார்த்தை
வீணாக வேண்டாம்
என் பெயரை
உச்சரிக்கையில் மட்டும்
வார்த்தைகள் உயிர் பெறட்டும்...

என்னை உரசி போனவர்களில்
உயிரை உலுக்கி போனவன் தானே நீ ..

வயிற்றுக்கு சோறிடும்
வேலை மட்டுமே உனக்கு..

உன் வாழ்க்கைக்கான
அத்தனைக்கும் இனி நானே பொறுப்பு..

அச்சம் நாணம் எல்லாம்
உன் காதலில் அடகு வைத்து
காதல் இச்சை தீர
கல்யாண மேடையில் எதிர் நின்றேன்..

விளக்கேற்ற வந்தேன்
உன் வீடு தேடி ..
இனி விளக்கணைந்த
நேரங்களில் எல்லாம்
என்னோடு நீ வெளிச்சம் தேடு ..

ஒருவனுக்கு ஒருத்தியாய் வந்தேன்..
உனக்குள் என்னை கரைத்துக்கொண்டு
உலகில் நீ
ஒருவனாகவே இருந்துவிடு ..

உன் பிள்ளை
நான் சுமக்க உன்னிடம்
பிள்ளையாகிப்போன
என்னை உன்னில் ஊற்றி
எனக்கும் சேர்த்து
என் பிள்ளைக்கும்
நீயே அன்னையாகி விடு.. ..

திங்கள், 9 ஏப்ரல், 2012

ஒரு காரணத்தை எப்படி வெளியில் சொல்வேன்..!

விழித்தெழும் ஒவ்வொரு
இரவு வேளையிலும்
ஒவ்வொரு கனவு ..

விஷமுள்ள நாகம்
யாரையோ தீண்டுவதாய்.

நரி ஒன்று
ஊருக்குள் ஊளையிடுவதாய்..

குரங்கு ஒன்று
எதையோ பறித்து போவதாய்..

யானை ஒன்று
பயமுறுத்தி துரத்துவதாய்.

நான் கண்ட
ஒவ்வொரு கனவிற்கும்
பயந்தபடியே பல காரணங்களை
சொல்கிறாள் அம்மா..

அத்தனையும் என்
ஒற்றை குணம்
என்பதை நான்
எப்படி வெளியில் சொல்வேன்..?

பொம்மையோடு கற்ற பாடம்..!

தினமும்
ஏதேதோ பேசுகிறாள்
என் மகள் பொம்மையோடு..

அவள் அயர்ந்த போது
என்ன பேசினாள்
என பொம்மையோடு வினவினேன்..

காட்டிகொடுக்கும் பழக்கம்
எங்கள் குலத்திற்கு இல்லை
என்பது போல் என்னிடம்
மௌனம் மட்டுமே காட்டியது